மோட்டார் வாகன உற்பத்திக் கைத்தொழில் துறையின் வளர்ச்சிக்காக கைத்தொழில் அமைச்சினால் பல்வேறு திட்டங்கள்

இலங்கையின் மோட்டார் வாகன உற்பத்தித் துறையில் உற்பத்தி செயல்முறையை எளிதாக்குவதற்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்கும் செயலமர்வொன்று பெப்ரவரி 16 ஆம் திகதி கொழும்பு மரினோ பீச் ஹோட்டலில் நடைபெற்றது. இந்தத் துறையில் ஈடுபட்டுள்ள கைத்தொழிலாளர்களுக்கு இந்தத் துறை தொடர்பாக அரசாங்கம் பின்பற்றும் வழிமுறைகள் மற்றும் தமது உற்பத்திகளுக்கு அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ள முடியுமான உதவி பற்றிய தெளிவைப் பெற்றுக்கொடுப்பதே இந்த செயலமர்வின் முதன்மை நோக்கமாகும். கைத்தொழில் அமைச்சின் செயலாளர் திருமதி திலக்கா ஜயசுந்தர அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தச் செயலமர்வில் 100 இற்கும் மேற்பட்ட மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள்மோட்டார் வாகன பாகங்களை ஒன்றிணைப்பவர்கள மற்றும் மோட்டார் வாகன உதிரிப்பாக உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டனர்.

கைத்தொழில் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த செயலமர்வு இலங்கை சுங்கம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம், இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களம், சுற்றாடல் அமைச்சு, மொரட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடாத்தப்பட்டது.

ஏற்றுமதியை மையமாகக் கொண்ட  பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக  இனங்கண்டு கொள்ளப்பட்டுள்ள 7 துறைகளிடையே மோட்டார் வாகன கைத்தொழில் துறை முக்கிய இடத்தை வகிக்கின்றது. அந்தக் கைத்தொழில் துறையை முன்னேற்றும் நோக்கத்துடன், 2021 ஆம் ஆண்டில், கைத்தொழில் அமைச்சானது  தனியார் துறையின் உதவியுடன்  மோட்டார் வாகன கைத்தொழிலுக்கான தர நிர்ணயத் தொழிற்பாட்டு நடைமுறையை (SOP) அறிமுகப்படுத்தியதன் பின்னர் அந்தக் கைத்தொழில் துறையில் துரித வளர்ச்சி ஏற்பட்டது.

2021 ஆம் ஆண்டாகும்போது  இலங்கையில் செயற்படுத்தப்பட்ட வாகன பாகங்களை ஒன்றிணைக்கும் கைத்தொழில்களின் எண்ணிக்கை 4 ஆக இருந்ததுடன், 2021 இல் தர நிர்ணயத் தொழிற்பாட்டு நடைமுறை (SOP) அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் 32 நிறுவனங்கள் வாகன பாகங்களை ஒன்றிணைப்பதற்காக கைத்தொழில் அமைச்சில் பதிவு செய்துகொண்டுள்ளன. அவற்றில 14 நிறுவனங்கள் தற்போது வர்த்தக ரீதியாக தங்களுடைய உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.   மேலும்  90 வாகன உதிரிப்பாக உற்பத்தியாளர்கள் வாகன உதிரிப் பாகங்கள் உற்பத்திக்கான பதிவைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன்  அவற்றில் 58 பேர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்தத் துறையின் முன்னேற்றத்திற்காக பல வேலைத்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கமையஅடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தக் கைத்தொழில் துறை பெரும் முன்னேற்றம் அடையும் என கைத்தொழில் அமைச்சினால் எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் வருடாந்த வாகன இறக்குமதிச் செலவான 1850 பில்லியன் ரூபாவை 30% மீதப்படுத்துவதும் எதிர்காலத்தில்  இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தின் அதிகளவை இத்துறையினூடாக வழங்குவதும் கைத்தொழில் அமைச்சின் நோக்கங்களில் ஒன்றாகும். அத்துடன் அதிக எண்ணிக்கையிலான தொழில் வாய்ப்புக்களை உருவாக்க முடியுமான ஒரு கைத்தொழிலாகவும் இந்தத் துறை முக்கியமானதாக இருக்கின்றது.  மோட்டார் வாகன உற்பத்தியின்போது  இரு சக்கர வாகனப் பாகங்களை ஒன்றிணைக்கும்போது உள்நாட்டு பெறுமதி சேர்ப்பு 25%  இலும் அதிகளவிலும்நான்கு சக்கர வாகனப் பாகங்களை ஒன்றிணைக்கும்போது உள்நாட்டு பெறுமதி சேர்ப்பு 20% இலும் அதிகளவிலும், உதிரிப் பாகங்கள் உற்பத்தியின்போது உள்நாட்டு பெறுமதி சேர்ப்பு  50% இலும் அதிகளவிலும் இருத்தல் வேண்டுமென்பதோடு அதன்போது அந்த உற்பத்திகளுக்காக 70%  வரிச் சலுகையைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த செயலமர்வின்போது  உள்நாட்டுப் பெறுமதி சேர்ப்பை அதிகரித்துக்கொள்ளல்இறக்குமதி ஏற்றுமதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளல்பிணைக்கப்பட்ட பண்டசாலைகளை (கிடங்குகள்) பேணிவரல், சுற்றாடல் அனுமதிப்பத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் அந்த துறையில் நிலவும் சிக்கல்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந்த செயலமர்வில் கைத்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், மோட்டார் வாகனத் துறை ஆலோசனைக் குழு உத்தியோகத்தர்கள்வாகன உற்பத்தியாளர்கள், வாகன பாகங்களை ஒன்றிணைப்போர்வாகன உதிரிப்பாக உற்பத்தியாளர்கள், தொழில் முயற்சியளார்கள் உள்ளிட்ட அதிக எண்ணிக்கையானோர் கலந்துகொண்டனர்.