ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தின்போது பாதணிகள் மற்றும் தோல் பொருட்கள் கைத்தொழில்துறையின் முன்னேற்றத்திற்கு தேவையான மூலோபாய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தயங்க மாட்டேன் என கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண அவர்கள் தெரிவித்தார். கடந்த பெப்ரவரி 09 ஆம் திகதி சிறிமாவோ பண்டாரநாயக்க கண்காட்சி மண்டபத்தில் கைத்தொழில் அமைச்சு, இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் பாதணிகள் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த “பாதணிகள் மற்றும் தோல் பொருட்கள் கண்காட்சி 2024″ கண்காட்சியில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
கண்காட்சிப் பூமி பூராவும் சென்று பார்வையிட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண அவர்கள், பாதணிகள் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கைத்தொழிலதிபர்களுடன் கருத்துகளை பரிமாறிக்கொண்டதுடன் அப்போது கைத்தொழிலதிபர்கள் தற்போது மூலப்பொருட்களை கொள்வனவு செய்வதிலுள்ள பிரச்சினைகள், பயிற்சி பெற்ற பணியாளர்கள் பற்றாக்குறை, உற்பத்தி செலவு அதிகரிப்பு, அமுலிலுள்ள வரிக் கொள்கைகள் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் போன்ற பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரிடம் விடயங்களை முன்வைத்தனர்.
இங்கு, சர்வதேச சந்தையை வெற்றிகொள்ள முடியுமான மட்டத்திலான உயர் தரமான பாதணிகள் மற்றும் தோல் உற்பத்திக்காக கைத்தொழில்துறையினரை தனிப்பட்ட வகையில் பாராட்டிய அமைச்சர், நாட்டிற்கு அன்னியச் செலாவணி வருமானத்தை சேமிக்கும் இந்தப் பாரிய கைத்தொழில் துறையை பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மிக விரைவில் எடுப்பதாக தெரிவித்தார்.