தேசிய 4i திட்டமானது இளம் தொழில்முனைவோரை உலகளாவிய சந்தைக்குத் தகுதியானவர்களாகக் கட்டியெழுப்புகிறது.
தேசிய 1,000 இளம் தொழில்முனைவோரை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் (4i திட்டம்) மாவட்ட ஒருங்கிணைப்பு (லியாசான்) அதிகாரிகளுக்கான விசேட பயிற்சித் திட்டமொன்று, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி திலகா ஜயசுந்தர அவர்களின் தலைமையில், ஜூன் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களாக கொழும்பு அறக்கட்டளை நிறுவனத்தில் (Colombo Foundation Institute) நடைபெற்றது. இப்பயிற்சித் திட்டம் நாட்டில் உள்ள 25 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மேலதிக மாவட்ட செயலாளர்கள் மற்றும் உதவி மாவட்ட செயலாளர்கள் உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட 40 அதிகாரிகளுக்காக நடத்தப்பட்டது.
கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு, தேசிய உற்பத்தித்திறன் செயலகத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தும் இந்த 4i திட்டமானது, 1,000 சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோரின் அறிவு, திறன்கள் மற்றும் அணுகுமுறைகளை மேம்படுத்துவதன் மூலம் அவர்கள் உலகளாவிய சந்தையை வெற்றிகரமாக அணுகுவதற்கு அதிகாரமளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம், தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்முனைவோர் ஏற்றுமதிச் சந்தையை அணுகும்போது எதிர்கொள்ளும் தடைகள் மற்றும் சவால்களைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வுகளை வழங்குவதுடன், அதன் மூலம் அவர்களின் உற்பத்தித் திறனையும் அதிகரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் முதன்முறையாக கம்பஹ மாவட்டத்தில் இதற்கான முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட்டதுடன், அதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட நூறு இளம் முயற்சியாளர்கள் வலுவூட்டப்பட்டனர். அந்த முன்னோடித் திட்டத்தின் வெற்றியின் அடிப்படையில் மேலும் ஆயிரம் இளம் முயற்சியாளர்களை இத்திட்டத்தின் ஊடாக வலுவூட்டுவதற்கு கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இத்தெரிவு செய்யப்பட்ட மாவட்ட தொடர்பு அதிகாரிகளின் நேரடி மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்பின் கீழ் இந்த 4I திட்டத்தை செயல்படுத்துவதற்கு கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு எதிர்பார்க்கின்றது. அத்துடன், இளம் முயற்சியாளர்களுக்கான வலுவான தலைமையைக் கட்டியெழுப்புவதற்கான மூலோபாயத் திட்டமிடல் குறித்து மாவட்ட தொடர்பு அதிகாரிகளுக்கு இப்பயிற்சித் திட்டத்தில் சிறப்புப் பயிற்சியும் வழங்கப்பட்டது. இப்பயிற்சித் திட்டத்தின் போது, முன்னோடித் திட்டத்தின் மூலம் வலுவூட்டப்பட்ட முயற்சியாளர்களின் தொழிற்சாலைகளுக்குச் சென்று கள அவதானிப்பு அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் இந்த தொடர்பு அதிகாரிகளுக்கு இப்பயிற்சித் திட்டத்தின் போது வாய்ப்புக் கிடைத்தது.