இலங்கையின் முதலாவது நிகழ்வு நாட்காட்டி வெளியீடு
நிகழ்வு முகாமைத்துவ (Event Management) கைத்தொழிற்துறையை ஒரு புதிய பரிமாணத்திற்கு இட்டுச் சென்று, இலங்கையின் முதலாவது நிகழ்வு நாட்காட்டி (Sri Lanka Event Calendar), கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் திரு. சுனில் ஹந்துன்னெத்தி அவர்களின் தலைமையில் அண்மையில் கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது..
கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சினால் அடையாளம் காணப்பட்ட புதிய கைத்தொழில் துறைகளில் நிகழ்வு முகாமைத்துவ கைத்தொழில் துறையானது முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளதுடன், இது கடந்த ஆண்டில் (2025) 60 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஒரு மாபெரும் கைத்தொழில் துறையாக விளங்குகின்றது.
இந்தக் கைத்தொழில் துறையை மேலும் அபிவிருத்தி செய்யவும், முயற்சியாளர்கள் தங்களது வணிகங்களை மேம்படுத்துவதற்கு ஆதரவளிக்கவும், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், நிகழ்வு முகாமைத்துவ ஆலோசனைக் குழுவினால் “இலங்கை நிகழ்வு நாட்காட்டி” தயாரிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய சுற்றுலாத்துறையுடன் இணைந்து, கலாசார விழாக்கள், விளையாட்டுக்கள், உயர்மட்டக் கூட்டங்கள் மற்றும் மாநாடுகள், கண்காட்சிகள் உட்பட இந்நாட்டில் நடத்தப்படும் முன்னணிக் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிகழ்வுகள் குறித்த உத்தியோகபூர்வ வழிகாட்டியாக இந்த “இலங்கை நிகழ்வு நாட்காட்டி” செயல்படும்.
இந்நிகழ்வில் உரையாற்றிய கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் திரு. சுனில் ஹந்துன்னெத்தி, நமது நாட்டின் புவியியல் அமைவிடத்திற்கு ஏற்ப இலங்கைக்கு இத்துறையில் மிகச்சிறந்த பல வாய்ப்புகள் இயல்பாகவே கிடைத்துள்ளன என்றும், பெருமளவிலான வெளிநாட்டு நாணயத்தை ஈட்டித் தருவதுடன் அதிகளவிலான மறைமுக வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ள இக்கைத்தொழிற்துறைக்குத் தேவையான வசதிகளை வழங்கி, இதற்கான அதிகபட்ச பங்களிப்பை அரசாங்கம் வழங்கும் என்றும் தெரிவித்தார். அத்துடன், சுற்றுலாத்துறையை ஊக்குவித்து, இலங்கையை நிகழ்வு முகாமைத்துவத்திற்கான ஒரு மையமாக (Hub) மாற்றுவதே தமது அமைச்சின் நோக்கமாகும் என்றும் அமைச்சர் ஹந்துன்னெத்தி மேலும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வு முகாமைத்துவ (Event Management) கைத்தொழில் துறையில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளவர்களுக்கும், இத்துறைக்கு புதிதாக நுழைபவர்களுக்கும் இத்துறை குறித்த முறையான கல்வி அறிவை வழங்குவதற்காக சர்வதேச நிகழ்வு முகாமைத்துவம் மற்றும் சந்தைப்படுத்தல் பற்றிய டிப்ளோமா பாடநெறி அறிமுகப்படுத்தப்படுவதும் இங்கு இடம்பெற்றது.