தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (NEDP) வெளியிட்டு வைக்கப்பட்டது.

இலங்கை பொருளாதாரத்தின் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான 2026–2030 தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (NEDP) கொழும்பில் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.

2026–2030 தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டமானது (NEDP), 2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளின் கீழ் இலங்கை அரசாங்கத்தின் கொள்கை வழிகாட்டல்களுக்கு இணங்க, நாட்டின் ஏற்றுமதித் துறையை வலுப்படுத்துவதையும் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைவதையும் நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு முக்கிய தேசிய வேலைத்திட்டமாகும். கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் (EDB) தலைமையின் கீழ், ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) கொள்கை சார்ந்த கடன் (PBL) திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட தொழில்நுட்ப உதவியுடன் இந்த மூலோபாயத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது அரசாங்கத்தின் முக்கிய நிறுவனங்கள், தனியார் துறை பங்குதாரர்கள் மற்றும் அபிவிருத்தி பங்காளிகளுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட பரந்த ஆலோசனை செயல்முறையின் விளைவாகும்.

அரசாங்க நிறுவனங்கள், தனியார் துறை நிபுணர்கள் மற்றும் சர்வதேச அபிவிருத்தி பங்காளர்களின் பொதுவான உடன்பாட்டுடன் இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இந்த அபிவிருத்தித் திட்டத்திற்குள் ஏற்றுமதி பன்முகப்படுத்தலை ஊக்குவிப்பதற்காக ஆறு ‘கிடைமட்டத் துறைகளும்’ (Horizontals) மற்றும் எட்டு ‘முன்னணி ஏற்றுமதித் துறைகளும்’ (Verticals) அடையாளம் காணப்பட்டுள்ளன.

“வளமான தேசம் – அழகான வாழ்க்கை” என்ற அரசாங்கத்தின் தேசிய தொலைநோக்குக் பார்வைக்கு இணங்க, இலங்கையின் ஏற்றுமதிப் போட்டித்திறனை மேம்படுத்துவதற்கும், 2030 ஆம் ஆண்டளவில் 36 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவாயை ஈட்டுவதற்கும் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பிராந்திய மற்றும் உலகளாவிய சந்தைகளில் இலங்கையை ஒரு போட்டித்திறன் மிக்க, விநியோகச் சங்கிலி மற்றும் அறிவு சார் ஏற்றுமதி மையமாக இலங்கையை மாற்றுவதே இந்த தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டத்தின் பிரதான தொலைநோக்காகும்.

இதன் மூலம் தயாரிப்புகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கும், நாட்டின் நீண்டகால பொருளாதார இஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுவதுடன், இந்த தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் எதிர்காலத்தில் இலங்கையின் பொருளாதாரத்தின் புதிய முன்னோடியாகச் செயல்படும்.