ஆடைத் துறையின் திறன் அபிவிருத்திக்காக நவீன பல்நோக்குக் கட்டடம் மாணவர்களிடம் ஒப்படைப்பு...

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் இரத்மலானையில் அமைந்துள்ள, இலங்கை ஜவுளி மற்றும் ஆடை நிறுவனத்தில் (SLITA) நிர்மாணிக்கப்பட்ட புதிய மூன்று மாடி பல்நோக்குக் கட்டடம், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் திரு. சுனில் ஹந்துன்னெத்தி அவர்களின் தலைமையில் அண்மையில் மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஜவுளி மற்றும் ஆடைத் துறையின் உயர் கல்வி மற்றும் பயிற்சியை மேம்படுத்தி, அத்துறையின் திறன் அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்ட நவீன வசதிகளைக் கொண்ட இந்த புதிய மூன்று மாடி பல்நோக்குக் கட்டடமானது, 150 கணினிகளைக் கொண்ட CAD ஆய்வகம், முழுமையான வசதிகள் கொண்ட வடிவமைப்புக் கூடம் (Art and Fashion Studio), நவீன மண்டபம், நூலகம் உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்டுள்ளது.

இந்த மூன்று மாடி பல்நோக்குக் கட்டடமானது, ஜவுளி மற்றும் ஆடைத் துறையில் தொழில்வாய்ப்புக்களுக்கான உள்நுழையும் பிள்ளைகளுக்கும் தொழில் வல்லுநர்களுக்கும் ஒரு நவீன கற்றல் சூழலை உருவாக்குவதுடன், அவர்கள் சர்வதேச மட்டத்திற்குள் பிரவேசிப்பதற்கான வழியையும் திறந்து விடுகின்றது. அத்துடன், மாணவர்களின் புத்தாக்கக் கல்வி, ஆக்கத்திறன் மற்றும் தொழில்முறைத் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பையும் இது வழங்குகின்றன. 2024 ஆம் ஆண்டில் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட இந்த மூன்று மாடி பல்நோக்குக் கட்டடத்திற்காக 520 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது

இங்கு உரையாற்றிய கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் திரு. சுனில் ஹந்துன்னெத்தி, ஆடைத் துறையானது  இலங்கைக்கு ஏற்றுமதி வருவாயை ஈட்டித் தரும் முதன்மையான வழிகளில் ஒன்றாக ஆடைத் துறை விளங்குவதால், இத்துறையின் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தி, திறன்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார். அத்துடன், இத்துறைக்கு ஆக்கத்திறன் கொண்ட புத்தாக்குநர்களின் தேவைப்பாடு நிலவுவதாகவும், சர்வதேச மட்டத்திலான ஆடை உற்பத்திகளுக்குத் தேவையான ஒரு கல்வி மையமாக இலங்கையை மாற்றுவதே தமது அமைச்சு உள்ளிட்ட அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்.