ஆடைத் துறைக்கு திறமைமிக்க தொழில் வல்லுநர்களை உருவாக்கி, SLITA Campus இருந்து 596 டிப்ளோமா தாரிகள்...

2025 ஆம் ஆண்டில் ஈட்டப்பட்ட 17.25 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தில் 4.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆடைத் துறையிலிருந்தே கிடைத்துள்ளதுடன், இலங்கையின் ஏற்றுமதி வருவாயை அதிகரிப்பதில் ஆடைத் தொழில்துறையே பிரதான பங்களிப்பை வழங்கும் துறையாக விளங்குகின்றது என கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி திலகா ஜயசுந்தர தெரிவித்தார். இலங்கை ஜவுளி மற்றும் ஆடை நிறுவனத்தின் (SLITA) கீழ் இயங்கும் SLITA Campus இனால் ஏற்பாடு செய்யப்பட்டு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற டிப்ளோமா மற்றும் உயர் தேசிய டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையின் ஜவுளி மற்றும் ஆடைத் துறையின் முன்னேற்றத்திற்காக தொழில் வல்லுநர்களை உருவாக்கும் முதன்மையான அரச உயர் கல்வி நிறுவனமான இலங்கை ஜவுளி மற்றும் ஆடை நிறுவனம் (SLITA), தங்களது கல்வி மற்றும் தொழில்முறை தகுதிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்த 596 டிப்ளோமா தாரிகளுக்கு டிப்ளோமா மற்றும் உயர் தேசிய டிப்ளோமா சான்றிதழ்களை வழங்கியது.

2009 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட இலங்கை ஜவுளி மற்றும் ஆடை நிறுவனம், இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதித் தொழில்துறைகளில் ஒன்றான ஆடைத் துறைக்குத் தேவையான திறமையான பட்டதாரிகளையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் பயிற்றுவிக்கும் ஒரு சிறந்த மையமாகும். கல்வி, புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் சிறந்து விளங்குதல் ஆகியவற்றின் ஊடாக இந்நாட்டு ஆடைத் தொழில்துறையின் எதிர்காலத்தை வலுவூட்டுவதே இந்நிவனத்தின் முக்கிய நோக்கமாகும். உள்நாட்டு மற்றும் சர்வதேச தொழில்துறை தரநிலைகளுக்கு இணங்க பல குறுகிய கால பாடநெறிகள், சான்றிதழ் பத்திர, டிப்ளோமா மற்றும் பட்டப் படிப்புகளை இலங்கை ஜவுளி மற்றும் ஆடை நிறுவனம் நடத்தி வருகின்றது. நவீன ஆய்வக வசதிகள், அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்கள், வலுவான தொழில்துறை ஒத்துழைப்பு மற்றும் நடைமுறை பயிற்சி வாய்ப்புகள் மூலம், வேகமாக மாறிவரும் ஆடைத் துறைக்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை திறன்களுடன் மாணவர்களை ஆயத்தப்படுத்துவதற்கு இந் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இலங்கை ஜவுளி மற்றும் ஆடை நிறுவனமானது ஆடைத் துறைக்கான ஒரு கல்வி நிறுவனமாக சர்வதேச மட்டத்திற்கு உயர்ந்து வருவதுடன், ஆடைத் தொழில்துறைக்கு பெரும் சேவையாற்றி அத்துறைக்குத் தேவையான திறமையான மனித வளத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கினை வகிக்கின்றது என திருமதி திலகா ஜயசுந்தர அவர்கள் இங்கு தெரிவித்தார்.