டிஜிட்டல் மாற்றத்தின் மூலம் பெண் தொழில்முயற்சியாளர்களை வலுவூட்டுவது குறித்த பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சித் திட்டம், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி. திலகா ஜயசுந்தர அவர்களின் தலைமையில் கொழும்பில் நடைபெற்றது. கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு, ஆசிய பசிபிக் பயிற்சி மையத்துடன் (APCICT) இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த மூன்று நாள் பயிற்சித் திட்டத்தின் மூலம், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சித் துறையில் தீவிரமாகச் செயல்படும் தெரிவுசெய்யப்பட்ட ஐம்பது பயிற்றுவிப்பாளர்களுக்கு இந்த விசேட பயிற்சி வழங்கப்பட்டது.
டிஜிட்டல் பொருளாதாரத்தில் பெண் தொழில்முயற்சியாளர்கள் வெற்றியடைவதற்குத் தேவையான அறிவை வழங்குவதும் அவர்களின் திறன்களை மேம்படுத்துவதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். தரவு சேகரிப்பு, தரவு பகுப்பாய்வு, மின்-வணிகம் (E-Commerce), டிஜிட்டல் சந்தைப்படுத்தல், செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய துறைகள் குறித்து இத்திட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி. திலகா ஜயசுந்தர அவர்கள், இலங்கையின் தேசிய பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கும் நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான பெண் தொழில்முயற்சித் துறையின் அபிவிருத்திக்கு டிஜிட்டல் மாற்றம் அத்தியாவசியமானது எனவும், இத்துறையின் முழுமையான திறனை வெளிக்கொணர வேண்டுமாயின் பயனுள்ள, புதுமையான, போட்டித்தன்மைமிக்க மற்றும் நிலையான தொழில்முயற்சிகளை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அதற்காக, தொழில்முயற்சியாளர்களை வலுவூட்டக்கூடிய திறமையான பயிற்றுவிப்பாளர்களின் வலுவான மற்றும் நிலையான வலையமைப்பொன்றை உருவாக்குவதே கைத்தொழில் அமைச்சின் நோக்கமாகும் என்றும் அவர் இங்கு மேலும் குறிப்பிட்டார்.
ஆசிய பசிபிக் பயிற்சி மையத்தின் Nuankae Wongthawatchai (Programme Management Officer, UN APCICT), Irene Boey (Founder, Irene AI Training & Consulting Consultant & Resource Expert for UN APCICT) , Koh Yoet Siang (AI, Digital Marketing & Ecommerce Trainer), Maria Juanita Macapagal (Social Development Consultant) ஆகியோரின் வள பங்களிப்பு இந்த மூன்று நாள் செயலமர்விற்காக வழங்கப்பட்டது.
இந்தச் செயலமர்வில் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. சுரங்க குணரத்ன அவர்கள், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் பொது வர்த்தகப் பிரிவின் பணிப்பாளர் திரு. எம்.எஸ்.எம். சப்ராஸ் அவர்கள், பிரதிப் பணிப்பாளர் திரு. நிஷான் ஷாமர அவர்கள் உள்ளிட்ட அமைச்சின் உத்தியோகத்தர்கள், தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் உத்தியோகத்தர்கள், சிறு வர்த்தக அபிவிருத்திப் பிரிவின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.