இலங்கையின் முன்னணி உணவுத் தொழிற்துறை கண்காட்சியான Pro food – Pro pack இந்த வருடமும்…

 

இலங்கையின் முன்னணி உணவுத் தொழிற்துறை கண்காட்சியான “Pro Food – Pro Pack – Ag Biz and Knowledge Hub 2026” கண்காட்சியானது அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் அமைச்சின் செயலாளர் திருமதி திலகா ஜயசுந்தர ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது

இலங்கை உணவுப் பொதியிடுவோர் சங்கம், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இக்கண்காட்சி இம்முறை 23 ஆவது தடவையாக நடத்தப்படுவதுடன், இம்முறை கண்காட்சியானது சீனா, இந்தியா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வெளிநாட்டுக் கண்காட்சிக் கூடங்களுடன் கூடிய 450 கண்காட்சி கூடங்களைக் கொண்டிருந்தது. வியாபாரத்திலிருந்து நுகர்வோருக்கு (B2C) மற்றும் வியாபாரத்திலிருந்து வியாபாரத்திற்கு (B2B) இடையிலான தொடர்புகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த “Pro Food – Pro Pack – Ag Biz and Knowledge Hub” கண்காட்சியானது, உணவுத் தொழிற்துறையுடன் தொடர்புடைய பொதியிடல் நிபுணர்கள், ஏற்றுமதியாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள், உணவு பதப்படுத்துபவர்கள், விநியோகஸ்தர்கள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோரை ஒன்றிணைத்து, வலையமைப்பு, அறிவுப் பகிர்வு மற்றும் வணிக வளர்ச்சி ஆகியவற்றுக்கான பெறுமதிமிக்க வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு பிரதான தளமாக விளங்குகின்றது.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சினால் இக்கண்காட்சியில் இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர அளவிலான உணவு பதப்படுத்துபவர்களுக்காக பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த SME காட்சிக் கூடத்தின் ஊடாக, சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர் (SME) தங்களது புத்தாக்கங்களை காட்சிப்படுத்துவதற்கும் சந்தை வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கும் ஒரு பெறுமதிமிக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.