இலங்கையின் நிலைபேறான கைத்தொழில் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதை வலியுறுத்தி, வள வினைத்திறன் மற்றும் சுழற்சிப் பொருளாதாரம் தொடர்பான 4 ஆவது சர்வதேச மாநாடு அண்மையில் கொழும்பில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு, இலங்கை தேசிய தூய்மையான உற்பத்தி நிலையத்துடன் (NCPC) இணைந்து ஏற்பாடு செய்த இம்மாநாட்டில், கைத்தொழில் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்காக வள வினைத்திறன், வலுசக்தி மாற்றம் மற்றும் சுழற்சிப் பொருளாதார எண்ணக்கரு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், நிலையான கைத்தொழில் வளர்ச்சிக்கான நடைமுறை அணுகுமுறைகள், வள உற்பத்தித்திறனை அதிகரித்தல், குறைந்த காபன் வெளியேற்றத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் மற்றும் சுழற்சி வர்த்தக நடைமுறைகள் ஊடாக வணிகங்களின் போட்டித்தன்மை மற்றும் சவால்களுக்கு முகங்கொடுக்கும் ஆற்றலை வலுப்படுத்தக்கூடிய விதம் குறித்தும் ஆராயப்பட்டது. மேலும், கைத்தொழில் வள வினைத்திறன், பொருட்களை மீளப் பயன்படுத்துதல், பசுமைச் சந்தை, வலுசக்தி முகாமைத்துவம் மற்றும் நிறுவன ரீதியான நிலைபேறாண்மை உள்ளிட்ட பல விடயங்களும் இம்மாநாட்டின் ஊடாக உள்ளடக்கப்பட்டன.
“நிலைபேறாண்மை தொடர்பான அர்ப்பணிப்புகளிலிருந்து சுழற்சிப் போட்டித்தன்மை வரையிலான கைத்தொழில்களுக்கான அடுத்தகட்ட முன்னெடுப்பு” எனும் தலைப்பில் இம்முறை மாநாட்டின் பிரதான உரையை ஆற்றிய CII – பசுமை வணிக நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் உலகளாவிய சூழலியல் அடையாளப்படுத்தல் வலையமைப்பின் (GEN) முன்னாள் தலைவருமான திரு. கே. எஸ். வெங்கடகிரி அவர்கள், நிலைபேறாண்மைக்கான அர்ப்பணிப்புகள் மற்றும் கைத்தொழில் போட்டித்தன்மை ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பு குறித்து விளக்கமளித்தார்.
இம்முறை மாநாட்டில் “நிலைபேறான வளர்ச்சிக்கான வள வினைத்திறன்” மற்றும் “நிலைபேறான அபிவிருத்திக்கான சுழற்சிப் பொருளாதார அணுகுமுறைகள்” ஆகிய தலைப்புகளில் இரண்டு புலமைசார் அமர்வுகள் நடத்தப்பட்டதுடன், அவ்வமர்வுகளின் ஊடாக வளங்களை மிகவும் வினைத்திறனாகப் பயன்படுத்துவதன் மூலம் வணிகச் செயற்றிறனை மேம்படுத்துதல், கைத்தொழில் பூங்காக்கள் மற்றும் கைத்தொழில்களுக்கு இடையிலான வளப் பரிமாற்றம் ஆகிய துறைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, தேசிய தூய்மையான உற்பத்தி நிலையத்தினால் (NCPC) நடைமுறைப்படுத்தப்படும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட GEN Awards 2026 சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.