அரச, பாடசாலை, உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளின் சிறப்புத் திறமைகளைப் பாராட்டி, “தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கல் விழா 2025/2026” நவம்பர் 8 ஆம் திகதி அதிமேதகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது.
இலங்கையில் உற்பத்தித்திறன் கலாசாரமொன்றைக் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டு, தேசிய உற்பத்தித்திறன் செயலகம் அரசாங்கத்தின் Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்போட்டித் தொடரின் ஊடாக, உற்பத்தித்திறன், புத்தாக்கம், வினைத்திறன் மற்றும் தொடர்ச்சியான மேம்பாடு ஆகியவற்றில் சிறந்த செயற்றிறனை வெளிப்படுத்திய 1,669 நிறுவனங்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டன.
இப்போட்டித் தொடரில் முகாமைத்துவம், வலுசக்தி வினைத்திறன், பசுமை உற்பத்தித்திறன், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் ஒழுக்கநெறி சார்ந்த நிர்வாகம் என்பவற்றில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பினால் (APO) பயிற்றுவிக்கப்பட்ட அனுபவமிக்க நடுவர் குழாமொன்று போட்டியின் நடுவர் பணிகளில் பங்கேற்றமை சிறப்பம்சமாகக் காணப்பட்டது.
இம்முறை விருது வழங்கல் விழாவில் 06 தங்க விருதுகள், 13 முதலாம் இடங்கள், 98 இரண்டாம் இடங்கள், 330 மூன்றாம் இடங்கள், 570 விசேட விருதுகள் மற்றும் 652 திறமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
லக்ஷ்மி டி சில்வா
செய்தி உத்தியோகத்தர்